திங்கள், 29 செப்டம்பர், 2008

என்ன நடக்கிறது இங்கே!?


நேற்று மாலை ஞாயிறு என்பதாலும், சற்று சலிப்படைந்து போயிருந்ததாலும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒளியூட்டி விட்டு, அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்தேன்..அப்போது ஒரு அரசியல் தலைவரின் அடைமொழியினைப் பெயராகக் கொண்ட தொலைக்காட்சியில் அக்டோபர் இரண்டாம் தேதியினை முன்னிட்டு சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பப் போவதாக சொல்லி இரு திரைப்படங்களை முன்னோட்டமிட்டுக் காட்டினார்கள்.

கூடல் நகர் என்ற படத்தினை அறிமுகப்படுதியக் குரல், " அக்டோபர் இரண்டு, உத்தமர் காந்தியடிகளின் பிறந்ததினத்தினை முன்னிட்டு எனக் கூறியவுடன் படத்தின் காட்சி ஒளிபரப்பாகியது, அதில் முதல் முதல் ஒளிபரப்பான வசனம், " அவனை இன்றைக்கேப் போட்டுடணும்டா" உத்தமர் காந்தியடிகளை இதை விட சிறப்பாக நினைவு கூற முடியுமா என்ன!?

அடுத்து ஒரு படம், தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம், "நந்து" வாம்! அதில் ஆயுதங்களாக பரிமாறிக் கொள்(ல்)கிறார்கள்! கனப் பொருத்தம்!

இறக்கும் தருவாய் வரையிலும், மற்றொரு உயிருக்குத் தீங்கு செய்திடல் கூடாது என்ற கொள்கையினைக் கடைப்பிடித்து, தன் இறப்புக்குக் காரணமானவனையும் மன்னிக்கச் சொல்லிச் சென்றவரின் பிறந்ததினத்தினை இதைக் காட்டிலும் சிறப்பாகக் கொண்டாட இயலுமா!? புல்லரிக்கிறது!

வெட்கக் கேடு! பெரியாரின் பிறந்ததினத்திற்கு, ரணபத்ரகாளியம்மன் பற்றிய திரைப்படம் ஒளிபரப்புங்கள்! நேரு அவர்களினை நினைவு கூற தீவிரவாதி பற்றி திரப்படமிடுங்கள்! மகான் காந்தியடிகளினை நினைவு கூற பேட்டை ரௌடியினை நாயகனாகக் கொண்ட படத்தினை ஒளிபரப்புங்கள்! தலைவர்கள் மனம் குளிர்ந்து விடும்! அத்தலைவர்களை அடுத்த தலைமுறை மிக நல்ல முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும்..!

வெட்கக் கேடு! இன்றைக்குத் தலைவர்களுக்கு இறந்த பின்னும் விடுமுறை தேவைப்படுகிறது..! அவர்கள், தங்களை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் கொண்டாட்டங்களில் இருந்து விடுமுறை கேட்கிறார்கள்.. அவர்கள் கொண்டிருந்தக் கொள்கைகளை சிதைக்கும் விதமானக் கொண்டாட்டங்களிலிருந்து விடுதலை கேட்கிறார்கள்!


அய்யா பெருமக்களே! தயவுசெய்து உங்கள் தலைவர்கள் நினைவு தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விடுமுறை விடுங்கள்! அவர்கள் வாழும் நாளில் கொண்டிருந்தக் கொள்கையினை சிதைக்கும் வகையிலான செயல்களைச் செய்து கொண்டாடும் கொண்டாட்டங்களில் இருந்து அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!தயவு செய்து சிந்தியுங்கள்! மாற்றங்களை செய்யுங்கள்!!!

1 கருத்து:

jash சொன்னது…

இன்னொரு தொலைகாட்சியில் கத்தாழை கண்ணாலே அழகி ஸ்நிகிதா வின் பேட்டி கூட இருக்குது. நாட்டுக்கு ரொம்ப தேவையானது தானே?? இதை விட எப்படி மஹாத்மாவிற்கு எப்படி மரியாதை குடுக்க முடியும்?